கூடுவாஞ்சேரி, அக். 29: வண்டலூர் அருகே முருகமங்கலம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக தயார் நிலையில் உள்ள 1,260 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை அரசு செயலாளர் சமயமூர்த்தி நேற்று திடீரென ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் மற்றும் முருகமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ₹151.94 கோடி மதிப்பீட்டில் 1,260 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதேபோல் விநாயகபுரம் பகுதியில் 1,760 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் முருகமங்கலம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,260 வீடுகளை தமிழக முதல்வர் நவம்பர் 3ம் தேதி தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சமயமூர்த்தி நேற்று திடீரென வந்து ஆய்வு செய்தார். இதேபோல் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ₹1.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடத்தையும் அவர் ஆய்வு செய்தார். இதனையடுத்து ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில் ₹394 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புற பகுதியின் டிரோன் காட்சிகளை பேருந்து நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.