மதுரை, செப். 8: வணிகவரித்துறையில் பணிபுரியும் உதவியாளர்களுக்கு, துணை மாநில வரி அலுவலராக பதவி உயர்வு வழங்கியதற்காக, தமிழ்நாடு அரசுக்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வணிகவரித்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், மதுரை தல்லாகுளத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் திருமால்செல்வன், தலைவர் குமார் மற்றும் பொதுச்செயலர் பொன்னிவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் வணிகவரித்துறையில் பணியாற்றும் ஆயிரம் உதவியாளர்களுக்கு, துணை மாநில வரி அலுவலராக பதவி உயர்வு வழங்கியதற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
வணிகவரித்துறையில் பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு உடனடியாக தீர்வு காண துணை மாநில வரி அலுவலர் நிலையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணிமூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண துறைரீதியான உயர்நிலை குழுவை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.