போடி, ஆக. 26: தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள சிந்தலைச்சேரி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சிவகுமார்(44). சலூன் கடை நடத்தி வருகிறார். சிவக்குமாரின் மாமியார் தமிழரசி போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திருப்பி கொடுத்து முடித்துக் கொண்டார். இந்த நிலையில் தமிழரசியிடம் கூடுதலாக வட்டிப் பணம் கேட்டு பாண்டி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருமகன் சிவகுமாரிடம் தமிழரசி தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழரசியின் இளையமகள் கனிமொழியுடன் சென்று பாண்டியை சந்தித்து சிவகுமார் தட்டிக் கேட்டார். அப்போது பாண்டியும், அவரது தந்தை மணிவேல், தாயார் மகேஸ்வரி ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி சிவகுமாரையும், கனிமொழியையும் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீஸ் நிலைய எஸ்ஐ கோதண்டராமன் பாண்டி மற்றும் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.