பல்லடம், ஆக.30: பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அருள்புரத்தில் ஜெயந்தி கல்வி நிறுவனத்தில் பள்ளி கல்வித் துறை சார்பாக பல்லடம் குறுமையத்தின் கூடைப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து, வளைகோல் பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இப்போட்டியினை ஜெயந்தி கல்வி குழுமத்தின் தலைவர் கு.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கால்பந்து போட்டியில் ஜெயந்தி மெட்ரிக் பள்ளி முதல் இடத்தையும், ஆதார்ஷ் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.
வளைகோல் பந்தில் ஜெயந்தி மெட்ரிக் பள்ளி முதல் இடத்தையும், திருப்பூர் ஏவிஏடி பள்ளி அணியினர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இறகு பந்தில் 17 வயதுக்குட்பட்ட தனிநபர் பிரிவிலும், கூடைப்பந்தில் 19 வயதிற்குட்பட்ட பிரிவிலும் ஜெயந்தி மெட்ரிக் பள்ளி முதல் இடத்தையும், இறகு பந்தாட்டத்தில் இருநபர் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இந்நிகழ்வில் ஜெயந்தி மெட்ரிக் பள்ளி முதல்வர் கு.முருகானந்தன், ஜெயந்தி பப்ளிக் (சிபிஎஸ்சி) பள்ளி முதல்வர் ச.மலர்விழி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆனந்தன், வினோத், கௌரி, பூமலூர் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.