சென்னை, ஆக.23: சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டு மற்றும் சாலை சீரமைப்புப் பணிகள் குறித்த சேவைத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் ரிப்பன் கட்டிடக் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்து பேசியதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை குழாய், குடிநீர் குழாய் பதித்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், மின்துறை பணிகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் போது ஏற்படுகிற சாலை வெட்டுகளை அந்தப் பணிகள் முடிவுற்றவுடன் உடனடியாக சீரமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும். இவை தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறின்றி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உரிய தடுப்பு வேலிகள் அமைத்து முடித்திட வேண்டும்.
மேலும், அனுமதியின்றி சாலை வெட்டுகளை தன்னிச்சையாக மேற்கொள்ளக் கூடாது. மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்றவுடன் தான் சாலை வெட்டுகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் தன்னிச்சையாக சாலை வெட்டுகளை மேற்கொள்ளும் தனியார்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் ஏற்படும் சிறு சிறு பள்ளங்களை உடனடியாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.