வடலூர், ஆக. 31: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சிறப்பு குழுவினர் ஆலோசனை நடத்தி ஆய்வு நடத்தினர். கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு ரூ.99.90 கோடி நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், வள்ளலார் சர்வதேச மையத்தை பெருவெளியில் அமைக்க கூடாது என பல்வேறு அரசியல் கட்சியினர், பொது நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும், வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு சொந்தமான 106 ஏக்கரில் 71.20 ஏக்கர் நிலம் மட்டுமே தற்போது உள்ளது. இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தை சேர்ந்த தமிழ்வேங்கை, கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த பாஜ மாநில நிர்வாகி வினோத் ராகவேந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து தெய்வ நிலையத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும். அரசின் அனைத்து துறைகளிலும் அனுமதி பெற்று சர்வதேச மையம் அமைக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி கடந்த ஜூன் மாதம் மற்றும் கடந்த வாரம் என இரண்டு கட்டமாக வள்ளலார் சத்திய ஞான சபை அருகில் அமைந்துள்ள 10 ஆக்கிரமிப்பு கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி, பூட்டி சீல் வைத்து, ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு வீடு, கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் வடலூர் வள்ளலாருக்கு சொந்தமான 79 ஏக்கர் நிலங்களை தவிர்த்து திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு சொந்தமான மீதமுள்ள நிலங்களை கண்டறியவும், அந்நிலத்தில்
ஆக்கிரமிப்புகள் ஏதும் இருப்பின் அவற்றை அகற்றிட நிலஅளவையர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்திடவும், அதில் இந்து சமய அறநிலைய துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினரை ஈடுபடுத்திடவும் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இப்பணியை ஒருங்கிணைத்து ஒரு மாத காலத்திற்குள் விரைவாக முடிவு செய்திட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை கண்டறிய ஆட்சியர், சிறப்பு குழுவை அமைத்தார்.
அதன்படி கடலூர் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் குழு அமைக்கப்பட்டு நேற்று குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலந்தாலோசித்து அங்குள்ள கோப்புகளை சரி பார்த்தனர். பின்னர் வடலூர் சத்திய ஞான சபை, தர்மசாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன், கோட்ட ஆய்வாளர் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சுரேஷ், வட்ட துணை ஆய்வாளர் மற்றும் குறுவட்ட நில அளவையர் வெங்கடாசலம், மண்டல துணை வட்டாட்சியர் சிவ சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ஜெயமாலினி, இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார், தனி வட்டாட்சியர் செந்தில்வேல், பார்வதிபுரம் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.