வடமதுரை, மே 31: வடமதுரை அருகே தென்னம்பட்டி பிலாத்து கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழா கடந்த மே 29ம் தேதி துவங்கி 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. முதல் நாள் விநாயகர், வரதராஜ பெருமாள், பிடாரி அம்மன், நாகேஸ்வரி, முருகன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.
2ம் நாள் பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் 3ம் நாளான நேற்று கோயில் முன்பு கிடாய் வெட்டி மஞ்சள் நீராடினர். பின்னர் அம்மன் கங்கை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.