வடமதுரை, ஜூலை 7: வடமதுரை – நத்தம் வழித்தடத்தில் வி.குரும்பபட்டி, வேலாயுதம்பாளையம், ஊத்தங்கரை, சடையம்பட்டி, ஆலம்பட்டி, செங்குறிச்சி, குடகிப்பட்டி, மணக்காட்டூர், குட்டுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. வடமதுரையில் இருந்து நத்தம் செல்ல இதுவரை நேரடி பஸ் வசதி என்பது இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் அதிகளவில் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் மா, புளி விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. இது தவிர காய்கறிகள், பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்து வருகிறோம்.
வடமதுரை – நத்தம் நேரடி பஸ் வசதி இல்லாததால் விளைவித்த பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது. எனவே வடமதுரை – நத்தம் மார்க்கத்தில் நேரடி பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் விவசாயிகள் பயனடைவோம். இவ்வாறு கூறினர். வடமதுரையில் இருந்து நத்தம் செல்லும் பயணிகள் செங்குறிச்சி வழியாக ஷேர் ஆட்டோக்களில் மணக்காட்டூர் சென்று அங்கிருந்து பஸ்களில் நத்தம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே வடமதுரை – நத்தம் வழித்தடத்தில் அரசுப்பேருந்துகளை இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.