நன்றி குங்குமம் டாக்டர்வட சென்னையின் அடையாளமாகவும் கெளரவமாகவும் இயங்கி வருகிறது பெரம்பூர் அரசு புறநகர் மருத்துவமனை. 1986-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இம்மருத்துவமனை, ஏறக்குறைய 5 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. மருத்துவமனையின் சூப்பிரண்டென்ட் டாக்டர் ஹேமலதா, அதன் சிறப்புகள் பற்றியும் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.‘‘பெரியார் நகரில் வசித்து வரும் தலைமைச் செயலக பணியாளர்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட மருத்துவமனை இது. ஆனால், நாளடைவில் இம்மருத்துவமனையின் சேவைகள் விரிவடைந்து, இப்போது வடசென்னை மக்களின் வரப்பிரசாதமாக மாறிவிட்டது. இம்மருத்துவமனை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் கீழ் இயங்கி வரும் 10 மருத்துவமனைகளில் ஒன்று. இங்கு சித்த மருத்துவப் பிரிவுக்காக பிரத்யேக மூலிகை தோட்டம் இருப்பது சிறப்புக்குரியது. இம்மருத்துவமனை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து உயர் சிகிச்சை தேவைப்பட்டால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம். பெரம்பூர், அண்ணா நகர், கொளத்தூர், மாதவரம், ரெட்டேரி, மஞ்சம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும் மருத்துவமனையாகும்.4 மாடிகளில் இயங்கி வரும் இந்த மருத்துவமனைக்கு தினமும் புறநோயாளிகளாக 1400 முதல் 1800 பேர் வரை சிகிச்சை பெற்று செல்கின்றனர். 14 மருத்துவர்கள், ஒரு செவிலியர் கண்காணிப்பாளருடன் 17 செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவமனையில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொதுநல மருத்துவம், காது-மூக்கு-தொண்டை, கண், எலும்பு, பல், மகப்பேறு மற்றும் சித்த மருத்துவம் ஆகிய பிரிவுகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. இது தவிர ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவத்தின் அடிப்படையில் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. திங்கட்கிழமையில் இதய நோய், செவ்வாய்க்கிழமை சர்க்கரை நோய், புதன்கிழமையில் தொழுநோய் மற்றும் தோல் பாதிப்புகள், வியாழன் அன்று முதியோர் நலன் ஆகிய சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், குழந்தைகளுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு போலியோ முகாம் நடத்தப்பட்டு சுமார் 800 குழந்தைகள் பயன்பெறும் வகையில் போலியோ சொட்டு மருந்து தரப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், மகப்பேறு சிகிச்சை பிரிவில், கர்ப்பவாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனையும், மார்பகப் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.குழந்தைப் பேறு தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் தரப்படுகின்றன. ICTC என சுருக்கமாக குறிப்பிடப்படுகிற Integrated Counselling And Testing Centre மூலமாக, இலவச HIV ஆலோசனை வழங்கப்பட்டு, ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. தற்சமயம் அடிக்கடி காய்ச்சல்கள் புதிதுபுதிதாக ஏற்படுவது அனைவரும் அறிந்ததே. இதற்காக பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கென்று சிறப்புப்பிரிவே தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அந்த வகையில் இங்கும் 24 மணிநேர காய்ச்சலுக்கான Fever Clinic செயல்பட்டு வருகிறது. இந்த காய்ச்சல் பிரிவு அவசர சிகிச்சைப் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்தில் சிக்கி, பலத்த காயம் அடைந்தவர்களுக்கும், விஷம் குடித்து, தற்கொலை செய்ய முயன்றவர்களுக்கும் பணியில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு, தேவையான முதலுதவி சிகிச்சைகளைத் தந்து 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலமாக, மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம். இதற்காகவே, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மையத்தை இங்கு அமைத்துள்ளோம். எமர்ஜென்சி வார்டில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக, சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வருகிறோம். காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் சிகிச்சை முகாம்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். கேட்கும் திறனில் குறைபாடு உள்ளவர்களுக்கு Hearing Aid இலவசமாக தருகிறோம். கண்புரை பாதிப்பு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து லென்ஸ் பொருத்துகிறோம். Catract அறுவை சிகிச்சை செய்வதற்காக 4 சிறப்பு கண் மருத்துவர்கள் உள்ளனர். மேலும், சித்த மருத்துவத்துக்கென்றே தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு தினமும் ரொட்டி, பால் வழங்கப்படுகிறது. 24 மணிநேரமும் ரத்தப்பரிசோதனை செய்துகொள்ளும் வசதி உள்ளது. ஒரு மாதத்தில் சராசரியாக 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இங்கு கண், மகப்பேறு, எலும்பு தொடர்பான அறுவை சிகிச்சை செய்வதற்கென்று 3 சிறப்பு அரங்குகள் உள்ளன.’’டாக்டர் தேவி(மகப்பேறு மற்றும் உள்ளுறை மருத்துவ அதிகாரி)‘‘இந்த மருத்துவமனையில் கடந்த 8 வருடங்களாக மகப்பேறு மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருகிறேன். உள்ளுறை மருத்துவ அதிகாரியாக(பொறுப்பு) 2 வருஷமாக செயல்பட்டு வருகிறேன். பெரியார் நகர் மட்டுமில்லாமல் சுற்று வட்டாரப் பகுதிகளான கொருக்குப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி போன்ற பகுதிகளிலும் எங்களுடைய மருத்துவமனை மிகவும் பிரசித்தம்.;முக்கியமாக, இதனுடைய சுற்றுப்புறத் தூய்மையைப் பார்த்தே ஏராளமானோர் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக அட்மிட் ஆனவர்கள், ‘மருத்துவமனைக்கு உள்ளே வந்துவிட்டாலே, தனியார் மருத்துவமனைக்குள் வந்தது போல் இருக்கிறது. அந்தளவுக்கு இதை எந்தவித சுகாதார கேடும் இல்லாமல் பராமரித்து வருகிறார்கள்’ என்று கருத்து தெரிவிக்கின்றனர். உயர் சிகிச்சை தேவைப்படுகிற நோயாளி களை, அரசு பொது மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் அனுப்பி வைத்தாலும், பெரும்பாலானோர் அங்கு செல்ல மறுத்து, எங்களிடமே சிகிச்சை பெற விரும்புகின்றனர். ஏனெனில் இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு பாய் என எல்லாருமே நோயாளிகளை தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து கவனித்து கொள்கிறோம். மகப்பேறு சம்பந்தமாக அட்மிட் ஆகிற பெண்கள் டிஸ்சார்ஜ் ஆகும்போது, அவர்களிடம் ஒரு ஃபார்மைக் கொடுத்து, உங்களுக்குத் தரப்பட்ட சிகிச்சைகளில் திருப்தி இருக்கிறதா மருத்துவமனை நிர்வாகம் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்? போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்க சொல்வோம். இதற்கு நிறைய பேர், எங்களுக்கு திருப்தி என்றே பதில் தருகின்றனர். இங்கு டாக்டர்கள் தொடங்கி கடைநிலை ஊழியர் வரையிலும் ஒருமித்த உணர்வுடன் பணியாற்றுகிறோம். ஏனெனில், ஏதாவது அவசரமான கேஸாக நோயாளிகள் வந்துவிட்டால், எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் நோயாளி குணமாவார். சிக்கலான நேரத்தில் டூட்டி டைம் முடிந்தவர்கள்கூட, வீட்டுக்குப் போகாமல், அந்த நோயாளிக்குத் தேவையானவற்றை செய்துவிட்டுத்தான் புறப்படுவார்கள். தங்களால் மருத்துவமனைக்கு எந்தவித கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இங்குள்ள ஒவ்வொருவரும் செயல்பட்டு வருகிறோம். 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தபோது, மருத்துவமனையைச் சுற்றி தண்ணீர் தேங்கி நின்றது. மின்சாரம் கிடையாது. டெலிபோன் வேலை செய்யவில்லை. வார்டு உள்ளேயும் தண்ணீர் நின்றதால், நோயாளிகளை வெளியே கொண்டு போக முடியவில்லை. சிகிச்சைக்காக யாரையும் அட்மிட் பண்ணவும் முடியவில்லை. அந்த சமயத்தில் பஸ், ஆட்டோ எதுவும் போக முடியவில்லை. ஆனாலும், நாங்கள் வீட்டுக்குப் போகாமல் ஜெனரேட்டர் வைத்து நீரை வெளியேற்றி, மின்சார வசதி ஏற்படுத்தி தந்தோம். நோயாளிகளுக்குத் தேவையான ரொட்டி, பால் தடையில்லாமல் கிடைக்க வழி செய்தோம். இந்தச் சவாலான சூழலில் நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டதால்தான் அதை சமாளிக்க முடிந்தது. பொதுமக்கள், காவல் துறையினர் உதவியுடன் மருத்துவமனையைச் சுகாதாரமாகப் பராமரித்து வருகிறோம்.’’ கலாவதி சுதர்சன்(நர்சிங் சூப்பிரண்டென்ட்) ‘‘இந்த மருத்துவமனையில் 33 வருடங்களாக நர்ஸாகப் பணியாற்றி வருகிறேன். இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் என எல்லோரும் அவர்களுடைய சொந்த வீடாகத்தான் இந்த மருத்துவமனையைப் பார்க்கிறோம். அந்த அளவுக்கு நாங்கள் மருத்துவமனையையும், இங்கு வருகிற நோயாளிகளையும் நேசிக்கிறோம். டெலிவரி வார்ட், சில்ட்ரன்ஸ் வார்ட் போன்றவற்றில் பல வருடங்கள் வேலை பார்த்துள்ளேன். இங்கே பிறந்த குழந்தைகளில் பலர் கலெக்டர், இன்ஜினியர், டாக்டர் ஆக உள்ளனர். எனவே, நர்ஸாக வந்ததற்கு நாங்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். ‘இந்த மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன்’ என்று இதுபோல் எங்களிடம் வந்து கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். என்னுடைய இன்னொரு தனிப்பட்ட கருத்தையும் சொல்கிறேன். மருத்துவ சேவையை எல்லோராலும் செய்ய முடியாது. அதிலும் செவிலியர் பணிகளை பொதுமக்களுக்கென்று சேவை செய்வதற்காகவே கடவுள் படைக்கிறார். அப்படி கடவுள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர்களால்தான் செவிலியராக இருக்க முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எங்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கும். ஆனால், யூனிஃபார்ம் போட்டுவிட்டால் அவற்றையெல்லாம் மறந்துவிடுவோம். ஏனெனில், எங்களுடைய வேலை அப்படி. நாங்கள் கம்ப்யூட்டருடனோ, எந்திரங்களுடனோ வேலை செய்வதில்லை.சக மனிதர்களுடன், அதிலும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு குணமடைவதற்கான பணியைச் செய்து வருகிறோம். அதனால் ஒரு டாக்டருக்கும், நர்ஸுக்கும் தலைவலி, காய்ச்சல் வந்தால் எப்படி வலிக்குமோ அதேதான் மற்றவர்களுக்கும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.எனவே, இப்பணி எங்களுக்கும் எப்போதும் கஷ்டமாகத் தெரிவது இல்லை.’’;;; ;சுஜாதா (செவிலியர் மற்றும் உணவு கூட பொறுப்பாளர்) ‘‘இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்காக மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மூன்று வேளை உணவு கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது 100-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு காலை உணவாகவும், இரவு உணவாகவும் பாலும் பிரட்டும் மட்டுமே தருகிறோம். முன்பு போல நோயாளிகளுக்கு மூன்று வேளையும் உணவு தந்தால் நன்றாக இருக்கும். அதுபோல சேதமடைந்திருக்கும் உணவுக்கூடத்தையும் சீரமைத்தால் நன்றாக இருக்கும்.இதுவரை வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தப்பட்டது ஏன் என்று இப்போது உள்ள மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை. உணவு வழங்குவது மீண்டும் தொடங்கப்பட்டால், நடுத்தர மக்கள் நிறையப் பேர் உள்ள வடசென்னை பகுதிவாசிகள் நிச்சயம் பயன் அடைவார்கள். மேலும் இந்த மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் துறை கடந்த 10 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு இறந்தவர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுவிடுகிறது. இந்த மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறையால் சில பகுதிகள் பயன்படுத்தாமல் இருக்கிறது. அரசு இந்தக் குறைகளை சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.’’ டாக்டர் செந்தில்குமார் (அவசர சிகிச்சைப் பிரிவு)‘‘உடல்நலன் பாதிப்பு, விபத்து, வன்முறை சம்பவங்கள் போன்ற காரணத்தால் வருகிற நோயாளிகளுக்கு உடனடி அவசர சிகிச்சை அளிக்கிறோம். தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களை நோயாளியின் பாதிப்பை பொறுத்து அருகில் உள்ள ஸ்டான்லி அல்லது ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கிறோம். அவசர சிகிச்சை பிரிவில் ஒரு மருத்துவர் இரண்டு செவிலியர்கள் துணை பணியாளர் போன்றவர்கள் பணியாற்றுகிறோம்.’’கீர்த்தனி (லேப் டெக்னீஷியன் )‘‘இந்த மருத்துவமனையில் சளி பரிசோதனை மையம் இயங்குகிறது. இந்த பரிசோதனையில் காசநோய் கண்டறியப்பட்ட நோயாளிகள் வீட்டில் இருந்து வந்து இங்கு மருந்து எடுத்து கொள்கிறார்கள். காசநோய் சம்பந்தப்பட்ட எல்லா மாத்திரைகளும் இங்கு இருக்கிறது. தீவிர நிலையில் உள்ள காசநோயாளிகளை அருகி–்ல் உள்ள ஓட்டேரி காசநோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம்.’’முருகன் (ஆய்வுக்கூடம் தலைமை டெக்னீஷியன்)‘‘இங்கு ரத்தத்தில் அனைத்துவித பரிசோதனையும் செய்கிறோம். ஒரு நாளைக்கு 70 பேரில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ரத்த பரிசோதனை செய்து அதன் ரிசல்ட்டை உடனடியாக தருகிறோம். 2 லட்சம் மதிப்பிலான ரத்த பரிசோதனை கருவி இங்கு உள்ளது. இந்த துறையில் நான்குக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறோம்.’’டாக்டர் சங்கீதா (குழந்தைகள் நலப் பிரிவு)‘‘இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகளாக வந்து பயன் பெறுகிறார்கள். உள்நோயாளிகளாக 15 பேரும், பச்சிளம் குழந்தைகள் 10 பேரும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துறையில் 2 மருத்துவர், செவிலியர், பணியாளர் என 8க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறோம். அனைத்துவிதமான காய்ச்சல்கள், ஆஸ்துமா, காசநோய், கல்லீரல், சிறுநீரகம், வயிறு சம்பந்தப்பட்ட; சிகிச்சைகளையும் அளிக்கிறோம்.’’டாக்டர் ஆரோக்கியா நிர்மலா நான்சி (சித்த மருத்துவ பிரிவு)‘‘தமிழ்நாட்டில் உள்ள அரசு அலோபதி பொது மருத்துவமனைகளில் மூலிகைத் தோட்டம் உள்ள ஒரே மருத்துவமனை இதுதான். இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மூலிகைளை தங்களுடைய நோய்களுக்கு பயன்படுத்தி கொள்வதற்காக இங்குள்ள மூலிகை தோட்டத்திற்கு அழைத்து சென்று அதைப்பற்றி விளக்கமும் அளிக்கிறோம். கிட்டத்தட்ட நேரடியான அனுபவம் கிடைப்பதால் தங்களுக்கு கிடைக்ககூடிய மூலிகை செடிகள் மூலம் அவர்கள் சிறப்பான பயன் அடைகிறார்கள். முதியவர்களுக்கு ஏற்படக்கூடிய வாதநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா அனைத்து நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கிறோம். மேலும் காய்ச்சல்கள், தோல் நோய்கள் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்கிறோம். வர்மம், தொக்கனம் போன்ற சிகிச்சைகள் தேவைப்பட்டால் அவர்களை அரும்பாக்கம் அண்ணா சித்த மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கிறோம். இந்தப்பிரிவில் ஒரு மருத்துவர் ஒரு மருந்தாளர் என இரண்டு பேர் பணியாற்றுகிறோம்.’’சபாபதி (46) உள்நோயாளி, கொளத்தூர்‘‘எனக்கு அடிக்கடி இதயத்தில் வலி ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. ஏற்கனவே, ஒரு முறை இங்கே அட்மிட் ஆனேன். அந்தச் சமயத்தில் டூட்டியில் இருந்த மருத்துவரும், செவிலியர்களும் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். சமீபத்தில் 20 நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டேன். எனவே, இரண்டாவது முறையாக இங்கே சேர்ந்திருக்கிறேன். மருத்துவமனையை சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். வட சென்னையில் வசிக்கிற ரெட்ஹில்ஸ், வில்லிவாக்கம், கொருக்குப்பேட்டை என பல ஏரியாக்களில் இருந்து தினமும் நிறைய பேர் சிகிச்சைக்காக இங்கே வருகிறார்கள். ஸ்கேன் எடுக்கும் வசதி இங்கே இல்லை. அதுமட்டுமில்லாமல், விரை வீக்கத்துக்கு அறுவை சிகிச்சை செய்கிற மருத்துவரும் இல்லை. முக்கியமான இந்த ரெண்டு வசதிகளையும் ஏற்படுத்தி தந்தால் இந்தப் பகுதிகளில் வசிக்கிறவர்களுக்கு ரொம்பவும் உதவியா இருக்கும்.’’பியுலா (67) புற நோயாளி, பெரம்பூர்‘‘எனக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னை இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு ரத்த அழுத்தம் அதிகரித்து மோசமான நிலையில் இங்கு சேர்க்கப்பட்டேன். 15 நாள் சிகிச்சைக்குப் பிறகு இயல்புநிலைக்கு திரும்பி இருக்கிறேன். இப்போது மருத்துவர் ஆலோசனையின்படி புறநோயாளியாக வந்துகொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கூட்டம் குறைவாக இருப்பதால் வந்தவுடன் சிகிச்சை பெற்றுக் கொள்கிறேன். இங்குள்ள மருத்துவர்கள் கனிவான முறையில் எனக்குத் தேவையான சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த மருத்துவமனை என் குடியிருப்புக்கு அருகில் இருப்பது பெரிய உதவியாக இருக்கிறது.’’– விஜயகுமார், க.இளஞ்சேரன்படங்கள் : ஆர்.சந்திரசேகர்
வடசென்னை மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்
112
previous post