தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதியில் நடுத்தர மக்களும், ஏழை, எளிய மக்களும் அதிகம் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், வடசென்னை பகுதி பின்தங்கிய பகுதியாக உள்ளதால் மேம்படுத்த வேண்டும் எனவும், கல்வியில் சிறந்து விளங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமிக்கும் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், முதல்வரின் ஆலோசனைபேரில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, ஒன்றிய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும், என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன்பேரில், ஆர்கே நகர், திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைப்பதற்காக இடத்தை தேர்வு செய்தனர்.திருவெற்றியூர் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தையும், ஆர்.கே.நகர் தொகுதியில் சென்னை துறைமுகம் குடியிருப்பு வளாகம் இடத்தை தேர்வு செய்தனர். இவ்விரு இடங்களிலும் வடசென்னை எம்பி, எம்எல்ஏக்கள், அதிகாரிகள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, இந்த இடத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்கலாம் என்பதை முடிவு செய்யப்பட்டது. மேலும், அதற்கான பணிகளை தொடங்ககோரி இருந்தனர். இருந்தபோதும் கேந்திர வித்யாலயா பள்ளி ஆரம்பிப்பதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், விரைந்து பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்ககோரி வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, சென்னை கலெக்டர் அமிர்தஜோதியை சந்தித்து அதற்கான மனுவை வழங்கினார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இம்மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். திருவெற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், கேந்திர வித்யாலயா சங்கத்தின் இணை ஆணையர் துணை ஆணையர், ரயில்வே நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்….