திருவொற்றியூர், ஆக. 29: வடசென்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை செயல்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மணலியில் திட்ட பணிகளை ஆய்வு செய்தபோது சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 16வது வார்டில், 149 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடப்பக்கம் ஏரியை ஆசிய வங்கியின் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி மானிய நிதி ₹58.33 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டு, இந்த பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ம் தேதி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கால்வாய் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன், மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோருடன் நேற்று கடப்பாக்கம் ஏரியை ஆய்வு செய்தார். அப்போது ஏரியின் புனரமைப்பு பணி தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து சடையன்குப்பம், பர்மா நகரில் ₹1.53 கோடி செலவில் நவீன எரிவாயு தகன மேடை கட்டப்படவுள்ள மயான பூமியையும், 20 மற்றும் 27 ஆகிய வார்டுகளை உள்ளடக்கி சுமார் ₹9 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் மணலி ஏரி புனரமைப்பு பணியையும் அவர் ஆய்வு செய்து பணிகளின் விவரங்களை கேட்டறிந்து விரைவாக பணிகளை முடிக்க கேட்டுக்கொண்டார். அப்போது மணலி பாடசாலை தெருவில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், ஆணையரிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
மணலியில் ஆய்வு செய்த பின்னர் ஆணையர் குமரகுருபரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை, மாநகராட்சி மணலி மண்டலத்தில் மழைநீர் வடிகால்வாய்கள், பள்ளிகள், அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக ஆய்வு மேற்கொண்டோம். பர்மா நகர் மயானத்தில் காஸ் எரிவாயு மேடை அமைக்கும் பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் வடசென்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்கு தேவையான பணிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, அவற்றை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றுவதற்காக மோட்டார்கள் வைக்கப்பட்டு, கடந்த ஆண்டுகள் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது கவுன்சிலர் சந்திரன், மாதவரம் மண்டல உதவி ஆணையர் திருமுருகன், உதவி பொறியாளர் குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
சுகாதாரமற்ற அம்மா உணவகம்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
ஆண்டார்குப்பம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் நேற்று திடீரென சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் உணவின் தரம், சப்ளை செய்யப்படும் மளிகை மற்றும் காய்கறி குறித்து விசாரித்தார். அப்போது உணவகம் அருகே கழிவுநீர் தேங்கியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆணையர் குமரகுருபரன், மக்கள் உணவருந்தும் உணவகத்தை இப்படி சுகாதாரமில்லாமல் வைத்திருக்கலாமா என்று மாநகராட்சி அதிகாரிகளை கடுமையாக கடிந்து கொண்டார். மேலும் இங்கு கழிவுநீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இந்த இடத்தை மீண்டும் வந்து பார்ப்பேன் என அதிகாரிகளை எச்சரித்தார்.