சென்னை, நவ.18: வடக்கு மண்டலத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த 800 காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் குற்ற செயல்களை தடுப்பதும், குற்ற செயல்கள் நிகழாமல் பார்த்துக் கொள்வதும் போலீசாரருக்கு சவாலான விஷயமாக இருந்து வருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஊர்களிலும் அந்த ஊரைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால். சென்னையில் சென்னை வாசிகள் குறைவு. வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தொழில் ரீதியாக சென்னையில் தங்கி பணிபுரிகின்றனர். அதனால் குற்ற செயல்கள் எப்போதும் சென்னையில் அதிகமாகவே நடைபெறும். அது மட்டுமின்றி வடசென்னை பகுதி ஒரு காலகட்டத்தில் ஆதி ஆந்திரா எனப்படும் பகுதியோடு சேர்ந்திருந்தது. இதில் ஆந்திரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் வட சென்னையில் தங்கி தங்களது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.
அதன் பின்பு, தொடர்ந்து குற்ற செயல்களிலும் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் வடசென்னைக்கு உட்பட்ட வியாசர்பாடி ,எம் கே பி நகர், கொடுங்கையூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்கள் அதிக அளவில் நடைபெற ஆரம்பித்தன. காலம் காலமாக அந்த பகுதிகளில் இது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வந்தாலும் ஒரு சில குற்ற செயல்களை அவர்களால் தடுக்க முடியவில்லை என்றே கூறலாம். அந்த வகையில் சென்னையில் நடைபெறும் தொடர் குற்ற செயல்களை தடுக்கவும், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், சென்னை மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில். இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்கள் துப்பாக்கியுடன் ரோந்து பணிக்கு செல்ல வேண்டும். மேலும் அதிதீவிர குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடிகள் உள்ளிட்ட பலரையும் தொடர்ந்து போலீசார் கண்காணித்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் வடக்கு மண்டலத்தில் உள்ள போலீசாரிடம் பேசிய ஆடியோ ஒன்று பரபரப்பாக பேசப்பட்டது.
அதில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கண்டிப்பாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் அவர்கள் மீண்டும் அதே காவல் நிலையத்தில் பணியை தொடரக்கூடாது எனவும், அதேபோன்று கஞ்சா, குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலும் விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு காவல் மாவட்டம், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம், பூக்கடை காவல் மாவட்டம், கொளத்தூர் காவல் மாவட்டம், அண்ணா நகர் காவல் மாவட்டம், கோயம்பேடு காவல் மாவட்டம் ஆகிய 6 காவல் மாவட்டங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த சுமார் 800 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில காவல் நிலையங்களில் ஐந்து ஆண்டுகள் 7 ஆண்டுகள் என பல ஆண்டுகளாக காவலர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 10 நாட்களில் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை வடக்கு மண்டலத்தில் சுமார் 800 காவலர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலும் குட்கா. மாவா. கஞ்சா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட வந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இரண்டு பாக்கெட் குட்கா வைத்திருந்தால் கூட அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் சில்லரை விற்பனையில் குட்கா வியாபாரத்தை செய்து வந்த பங்க் கடைகள். மற்றும் மளிகை கடைக்காரர்கள் கூட குட்கா வியாபாரத்தில் ஈடுபட போவதில்லை என முடிவெடுத்து தங்களது வியாபாரத்தை நிறுத்தி உள்ளனர். மேலும் கஞ்சாவுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு கஞ்சா மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக கடந்த ஒரு மாதத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்ததன் விளைவாக இரவு நேரங்களில் குற்ற செயல்கள் வெகுவாக குறைந்துள்ளன. குறிப்பாக மனித உடலுக்கு காயங்கள் ஏற்படுத்தும் குற்ற செயல்கள் பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெயர் கூற விரும்பாத வடக்கு மண்டலத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஒரு மாத காலமாகவே போதைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் வடக்கு மண்டலத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் பெருமளவு குறைந்துள்ளது. சென்னை பகுதியை ஒட்டி ஆந்திரா உள்ளதால் எளிதாக அங்கு சென்று கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை இளைஞர்கள் வாங்கி அதனை சென்னைக்கு கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் ஆந்திரா எல்லை பகுதி மற்றும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதேபோன்று இரவு நேரங்களில் பெருமளவு குற்ற செயல்கள் குறைந்துள்ளன. இது பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று ரவுடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் தற்போது காவல் நிலையத்திற்கு வரும் வழக்குகள் மீது கண்டிப்பாக வழக்கு பதிய வேண்டும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பஞ்சாயத்து பேசி முடிக்க நினைக்கும் போலீசாருக்கு இது மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.காவல் நிலையத்திற்கு வரும் நபர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இதேபோன்று பழைய வழக்குகளில் பல வழக்குகளில் குற்ற பத்திரிகை பதிவு செய்யாமல் உள்ளது. அவ்வாறு இருக்கக் கூடாது எனவும், கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு ஒருவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணியுடன் வழக்கு முடிந்து விட்டது என்று எண்ணாமல் கண்டிப்பாக அடுத்தடுத்து அந்த வழக்குகளை பின்தொடர்ந்து குற்ற பத்திரிகை பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என தற்போது உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் சிறு சிறு வழக்குகளில் அடிக்கடி சிக்குபவர்கள் கூட ஒவ்வொரு வழக்கிற் கும் நீதிமன்றத்திற்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
எனவே அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை பெருமளவு குறைக்க முடியும் என உயர் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். எனவே பழைய வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தற்போது குற்ற பத்திரிகை போடும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. ஒரு சில போலீசாருக்கு இது சங்கடத்தை கொடுத்தாலும் காலப்போக்கில் இதுவும் அவர்களுக்கு பழகிவிடும். எனவே நீண்ட காலமாக இல்லாத ஒரு விஷயத்தை தற்போது காவல்துறையினர் பழக ஆரம்பித்துள்ளனர். ஆரம்ப கட்டத்தில் இது அவர்களுக்கு கடினமாக இருந்தாலும் இந்த விஷயத்தை அவர்கள் பழகிக் கொண்டால் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சட்டம்- ஒழுங்கை அவர்கள் கட்டுக்குள் வைத்திருக்கலாம்,’’ என தெரிவித்தார்.
தீவிர கண்காணிப்பு
ஒரு இடத்தில் கஞ்சா விற்பனை நடைபெற்றால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகபட்சமாக அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருப்பதால் வடக்கு மண்டலத்தில் கஞ்சா அதிகமாக புழங்கும் பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு, பூக்கடை, கொருக்குப்பேட்டை, தலைமைச் செயலக காலனி, டி.பி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் கஞ்சா விற்பனை பெருமளவு தடைபட்டுள்ளது. ஓரிரு இடங்களில் வெளியிடங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதனை இளைஞர்கள் புகைத்து வருகின்றனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
புகார் மீது நடவடிக்கை
ஒரு புகார்தாரர் வருகிறார் என்றால் கண்டிப்பாக அவர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவராக இருப்பார். அவர் சமரசத்திற்கு ஒத்துப் போவதாக கூறி எதிர்ப்புகார்தாரர் மூலம் நியாயம் கிடைக்கும் பட்சத்தில் நாங்கள் வழக்கு பதிவு செய்வதில்லை. அதே நேரத்தில் எதிர் மனுதாரர் ஒத்துவரவில்லை என்றால் கண்டிப்பாக வழக்கு பதிவு செய்ய உயர் அதிகாரிகள் தற்போது அறிவுறுத்துகின்றனர். அதனால் அனைத்து வழக்குகளுக்கும் தற்போது வழக்கு பதியப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கிறது.