சென்னை, அக்.20: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,035 இயந்திரங்கள், 23,000 அலுவலர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வுக் கூட்டத்தில் மேயர் பிரியா உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
ஆய்வு கூட்டத்துக்கு தலைமை வகித்து மேயர் பிரியா பேசியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு, மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் முடியாத இடங்களில் விரைவாக முடித்து இணைப்பினை ஏற்படுத்திட வேண்டும். புதிதாக சாலை வெட்டுக்கள் எதுவும் மேற்கொள்ள கூடாது. மழைநீர் வடிகாலில் உள்ள வண்டல்களை முழுமையாக அகற்றிட வேண்டும். சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 53.42 கி.மீ. நீளமுள்ள 33 நீர்வழி கால்வாய்களில் ஆகாயத்தாமரை போன்ற நீர்த்தாவரங்களும், சேறு, சகதி உள்ளிட்ட வண்டல்களும் ஆம்பிபியன், ரோபோட்டிக் எஸ்கவேட்டர் போன்ற நவீன இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு முடித்திட வேண்டும்.
சாலை பணிகளையும், சாலை சீரமைப்பு பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில், மக்களுக்கு இப்பணிகள் நடைபெறும் விவரத்தினை தெரிவித்து, அறிவிப்பு பலகைகள் வைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து நிலைகளிலும் 23,000 அலுவலர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பிலுள்ள 22 சுரங்க பாதைகளில் மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், டீசல் மற்றும் நீர்மூழ்கி மின்சார பம்புகள், பாப்காட், பொக்லைன், ஆம்பிபியன், மரஅறுவை இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட 1,035 இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் லலிதா, இணை ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையாளர் ஷரண்யா அறி, வட்டார துணை ஆணையாளர்கள் எம்.பி.அமித், கட்டா ரவி தேஜா, தலைமைப் பொறியாளர்கள் எஸ்.ராஜேந்திரன், என்.மகேசன், சக்தி மண்கண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கட்டுப்பாட்டு மையம்
மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 169 நிவாரண மையங்களும், பொதுமக்களுக்கு தேவையான உணவு தயாரிக்க பொது சமையற்கூடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து மழை, நீர்த்தேக்கம் மற்றும் விழும் மரங்கள் தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்பு பணி
டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று கொசுப்புகை மருந்து அடித்தல் மற்றும் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 1ம்தேதி முதல் இதுவரை 292 கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்களை அகற்றும் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.