சென்னை, நவ.15: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும், என மாநகராட்சி அலுவலர்களுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அலுவலர்களால் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா தலைமையில் காணொலி காட்சி மூலம் ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை உள்ளிட்ட களப்பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கும் இடங்களில் மழை நீரினை அகற்றுவதற்கான மோட்டார் பம்புகள் மற்றும் பேரிடர் மீட்பு வாகனங்கள் இயங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அனைத்து அலுவலர்களாலும் களத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா, காணொலி காட்சியின் வாயிலாக கேட்டறிந்து, மேலும் களத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஒவ்வொரு மண்டலங்கள் வாரியாக, வடகிழக்கு பருவமழைக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், தீவிரமாக மழை பெய்யும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், தயார் நிலையில் உள்ள மோட்டார் பம்புகள் மற்றும் இயந்திரங்கள் குறித்தும் மேயர் பிரியா கேட்டறிந்தார். தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, அலுவலர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது: மழைக்காலங்களில் பொதுமக்களை பாதிக்காதவாறு தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் அனைத்து அலுவலர்களும். பணியாளர்களும் விழிப்புணர்வுடன் பணியாற்றிட வேண்டும். சென்னை மாநகராட்சியின் 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர்த்தேக்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்யும் மழையின் காரணமாக பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
மழை காரணமாக விழும் மரங்களையும், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளையும் உடனடியாக அகற்றிட வேண்டும். மழையின் காரணமாக சேதமடையும் சாலைகளை சீரமைத்திடவும், வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் ஏற்பட்டுள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் வண்டல்களை தொடர்ந்து அகற்றிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை தொடர்பாக சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் லலிதா, இணை ஆணையர் சமீரன், துணை ஆணையர் ஷரண்யா அறி, வட்டார துணை ஆணையர்கள் அமித், பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மோட்டார் அறைகள் ஆய்வு
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி மேயர் பிரியா நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக புளியந்தோப்பு டிம்ளர்ஸ் சாலை பகுதியில், பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் சந்திப்பு அருகே உள்ள பம்ப் ரூம் மற்றும் அங்காளம்மன் கோயில் தெரு மற்றும் ஸ்டீபன்சன் சாலையில் உள்ள மின் மோட்டார் அறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். புளியந்தோப்பு பகுதியில் வழக்கமாக சிறு மழைக்கே தண்ணீர் தேங்குவது வழக்கம். எனவே மின்மோட்டார்கள் மூலம் அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். எனவே குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மின் மோட்டார்கள் சரிவர பராமரிக்கப்படுகின்றனவா, அதிக மழை பெய்தால் எவ்வாறு கூடுதல் மின் மோட்டார்களை இயக்குவது என்பது குறித்து மேயர் பிரியா அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், திருவிக நகர் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர் சரவணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் உடன் இருந்தனர்.