சென்னை, அக்.6: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மீட்புப் பணிக்கான இயந்திரங்களை ஆய்வு செய்து, நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும் கூடுதல் ஆணையர் உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்டையில், சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், கீழ்ப்பாக்கம் விளையாட்டரங்க வளாகத்தில், மழையினை முன்னிட்டு மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள், மர அறுவை இயந்திரங்கள், நீர் உறிஞ்சும் வாகனங்கள், பாப்காட், ஜே.சி.பி., கனரக மற்றும் இலகுரக வாகனங்கள், படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை, கூடுதல் ஆணையாளர் ஆர்.லலிதா நேற்று பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை உரிய நேரத்தில் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்கவும், அதன் செயல்பாடுகளை பரிசோதித்து செயல்படும் வகையில் வைத்திருக்கவும், அலுவலர்கள் மற்றும் சேவைத் துறை அலுவலர்கள் அனைவரும் இந்தப் பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், விழிப்புணர்வுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், நிவாரண மையங்களையும், நிவாரண மையங்களில் தங்குபவர்களுக்காக தயாரிக்கப்படும் உணவிற்கான பொது சமையற் கூடத்தினையும் தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், மண்டல அலுவலர் முருகேசன், செயற்பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.