தர்மபுரி, செப்.5: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன்பெறலாம். தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் மூலம், பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி இ-கேஒய்சி (விரல் ரேகை) மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா ‘போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும்.
இந்த கணக்கிற்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது.மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமை தொகையை, அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், டோர் ஸ்டெப் பேங்கிங் என்ற சிறப்பு சேவை மூலமும் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். எனவே, மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்கி பயனடையலாம். தர்மபுரி மாவட்டத்தின் பயனாளிகள் அனைவரும், மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி, ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்கி பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.