சிவகங்கை, ஜூன் 16: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் ஆயிரத்து 866 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 13 மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் ஆயிரத்து 756 குற்ற வழக்குகள், 104 செக்மோசடி வழக்குகள், 186 வங்கிக்கடன் வழக்கு, 266 வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, 72 குடும்ப பிரச்னை வழக்கு, 389 சிவில் வழக்கு என மொத்தம் 2ஆயிரத்து 773வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன.
இதில் ஆயிரத்து 866 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.10 கோடியே 56லட்சத்து 91 ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 441 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.63 லட்சத்து 50ஆயிரம் வரவானது. சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி, கூடுதல் மாவட்ட நீதிபதி பார்த்தசாரதி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.
தேவகோட்டை சார்பு நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. முதல் பெஞ்சில் சார்பு நீதிபதி கலைநிலா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரேமி வழக்கறிஞர் முத்தரசு பாண்டியன், இரண்டாவது பெஞ்சில் குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வி பூர்ணிமா, வழக்கறிஞர் குமார் ஆகியோர் முன்னிலையில் 1401 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு 210 வழக்குகளில் இரு தரப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் சமரசம் செய்து தொகை ரூ.3 கோடியே 25 லட்சத்து 41,800க்கு தீர்வு காணப்பட்டது.