வேலூர், பிப்.8: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் லைசென்ஸ் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சிலர் தங்களது பாதுகாப்புக்காக லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருக்கின்றனர். இவ்வாறு லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். தேர்தல் காலங்களில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதிமுறை.
அதன்படி நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான பணிகளில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் ஈடுபட தொடங்கி உள்ளனர். மேலும் வாக்குச்சாவடிகள், வாக்குப்பதிவு எண்ணும் மையங்கள் ஆகியவை தயார்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட மாவட்டங்களில் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் விவரங்கள் அந்தந்த காவல் நிலையங்களில் உள்ளது. அதன்படி அவர்களது விவரங்கள் சேரிக்கப்பட்டு வருகிறது. லைசென்ஸ் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகள் கணக்கெடுத்து, பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும், துப்பாக்கி வைத்துள்ளவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அவற்றை ஒப்படைக்க வேண்டும். மேலும் வங்கி பணியில் துப்பாக்கி வைத்துள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.