மேட்டுப்பாளையம், அக்.21: மேட்டுப்பாளையம் ராமேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் விஜய் (23) பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் தியேட்டரில் வெளியான நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது, அதே தியேட்டரில் மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் மகன் பிரபாகரன் (21).
நண்பர்கள் சங்கர் நகரை சேர்ந்த பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மகன் விஜய்(18), மணி நகரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மகன் அஸ்வின்(21), சங்கர் நகர் மூன்றாவது வீதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் மாதவன் (19) உள்ளிட்டோருடன் படம் பார்க்க சென்றுள்ளனர். அனைவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.அப்போது, விஜய்க்கும், மற்றவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் படம் முடிந்து வெளியே வந்த விஜயை வழி மறித்த பிரபாகரன், விஜய், அஸ்வின், மாதவன் உள்ளிட்ட நால்வரும் சேர்ந்து கைகளால் தாக்கியும், கத்தியால் குத்தியும் உள்ளனர்.இதில் விஜய்க்கு முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் பிரபாகரன், அஸ்வின், மாதவன் உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான மற்றொரு விஜய்யை வலை வீசி தேடி வருகின்றனர்.