போடி, ஆக.27: போடி அருகே தர்மத்துப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (23). இவர் தேனி பி.சி பட்டியில் உள்ள தனியார் பேட்டரி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை மாலை வேலையை முடித்துக் கொண்டு டெம்புச்சேரி நாகலாபுரம் வழியாக இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பாலம் அருகே லிப்ட் கேட்பது போல் 3 பேர் வழிமறித்து, யுவராஜின் பாக்கெட்டில் இருந்த ரூ.7,500ஐ பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் யுவராஜ் புகார் கொடுத்தார். இது தொடர்பாக எஸ்.ஐ கோதண்டராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை விசாரித்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது தேவாரம் அருகே உள்ள செல்லாயிபுரத்தை சேர்ந்த சரத்கு மார், சுதன் குமார், தேவாரம் அருகே உள்ள லட்சுமண நாயக்கன்பட்டி சமத்துவ புரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து போடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.