லால்குடி, ஆக.19: லால்குடி வட்டார பகுதியில் குறுவை பயிர்விவசாயம் செய்ய முடியாத விவசாயிகள் மாற்றுப் பயிராக உளுந்து பாசிப்பயிர் பயிரிட்டு பயன்பெறலாம் என்று வேளாண் உதவி உதவி இயக்குனர் சுகுமார் ஆலோசனை வழங்கினார். லால்குடி வட்டாரம் எசனைக்கோரை கிராமத்தில் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் கலந்து கொண்டு பேசியதாவது: லால்குடி வட்டாரத்தில் குறுவை பயிர் செய்ய முடியாத விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடி செய்யலாம்.
மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு எட்டு கிலோ சான்று பெற்ற உளுந்து விதைகள், உயிர் உரங்கள் ரைசோபியம் 500 மில்லி, பாஸ்போபாக்டீரியா 500 மற்றும் உயிரியல் காரணி சூடோமோனஸ் ஒரு கிலோ ஆகியவை 50 சதவீத மானியத்தில் லால்குடி வட்டார விரிவாக்கம் மையத்தில் வழங்கப்படுகிறது. மேலும் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், விவசாயிகள் கவுரவ நிதி திட்டம், தமிழ் மண்வளம் செயலி பயன்படுத்துதல், மண் மாதிரி சேகரிப்பு அவசியம் மற்றும் மண் மாதிரி அடிப்படையில் உர நிர்வாகம் அளித்தல் பற்றி தெரிவித்தார். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சபரிச்செல்வன் அட்மா திட்ட செயல்பாடுகள், விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் பற்றி விளக்கி கூறினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்தார். தொடர்ந்து வேளாண்மை உதவி அலுவலர் ராஜசேகரன், வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். இக்கூட்டத்தில் கவிதா மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள், திண்டுக்கல் காந்தி கிராம கல்லூரியின் விவசாய மாணவர்கள், எசனைக்கோரை கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.