லால்குடி, ஜூன் 10: லால்குடி அருகே டூவீலரில் சென்ற பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா ந.பூலாம்பட்டி கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அருளப்பன் (56). இவரது மனைவி இன்னாசியம்மாள் (55). இந்நிலையில் இன்னாசியம்மாள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள குலமாணிக்கம் கிராமத்தில் உறவினர் வீட்டு புதுமணை புகுவிழா நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கடந்த 6ம் தேதி உறவினரான சந்தியாகு (53) என்பவருடன் டூவீலரில் சென்றார். திருமழபாடி சாலையில் ஆலம்பாக்கம் புனித தோமையார் தொடக்கப்பள்ளி வேகத்தடை அருகே சென்றபோது, இன்னாசியம்மாளுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு டூவீலரில் இருந்து தானே கீழே விழுந்துள்ளார்.கீழே விழுந்ததில் வலது பக்க தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இந்நிலையில்பின்னால் வந்திருந்த அவரது உறவினரான ராஜேந்திரன் என்பவர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இன்னாசியம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார்.
அருளப்பன் கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.