லால்குடி, ஆக.24: லால்குடியில் திருச்சி, சிதம்பரம், சென்னை, கரூர், நாமக்கல் இணைக்கும் அரைவட்ட சாலை அமைய உள்ள இடங்களில் முதல் கட்ட பணிகளை திருச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செந்தில் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சி அரை வட்ட சாலையான திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரித்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி-சென்னைதேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி-நாமக்கல் சாலை ஆகியவற்ற இணைத்து திருச்சி-கரூர் சாலையில் இணைகிறது.
இச்சாலை திருச்சி அசூரில் தொடங்கி கல்லணை, லால்குடி, வழியாக பூவாளூர் புறவழிச் சாலையில் முடிந்து, மறுபடியும் மண்ணச்சநல்லூரில் இருக்கும் புறவழிச்சாலையில் தொடங்கி வாத்தலை வழியாக ஜீயபுரம் பாதையை அரைவட்ட சாலையில் இணைக்கும் இடத்தில் முடிகிறது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் செந்தில் கலந்துகொண்டு லால்குடி அருகே மணக்கால் பகுதியில் ரயில்வே மேம்பாலம் தற்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தின் அருகே ஆய்வினை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் வாத்தலை, மண்ணச்சநல்லூர், பூவாளூர், லால்குடி கொள்ளிடக்கரை பகுதியிலும் அரைவட்ட சாலை பகுதிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, லால்குடி உதவி கோட்ட பொறியாளர் சிட்டி பாபு, உதவி பொறியாளர் கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.