சேத்துப்பட்டு, ஆக.4: சேத்துப்பட்டு அருகே அடுத்தடுத்து, லாரி, ரோடு ரோலர் எதிரே வந்த காரும் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு போளூர் சாலையில் தச்சம்பாடி அருகே போளூரில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி நேற்று ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற ரோடு ரோலர் மீது எதிர்பாராமல் மோதியது. இதில் ரோடு ரோலரின் முன்பகுதி கழன்று ஓடியது. அப்போது காஞ்சிபுரத்திலிருந்து சேலம் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு காஞ்சிபுரம் மலைத் தோட்டம் பால்வாடி தெருவை சேர்ந்த மணிகண்டன்(28), அவருடைய மனைவி சுகன்யா(27), உறவினர்கள் தர்(27), கார்த்தி (30) ஆகிய 4 பேர் வந்த கார் எதிர்பாராமல் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த மணிகண்டன் டிரைவர் சீட்டில் இடிபாடுகளுடன் சிக்கி இருந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி மூலம் மணிகண்டனை மீட்டனர். மேலும், இந்த விபத்தில் ரோடு ரோலர் ஓட்டி வந்த சேத்துப்பட்டு லூர்து நகர் பாத்திமா தெருவை சேர்ந்த கண்ணன் காயமடைந்தார். பின்னர், காயம் அடைந்த 5 பேரும் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, காரில் வந்த 4 பேரும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.