கூடுவாஞ்சேரி, ஆக.17: வண்டலூர் அருகே நெடுங்குன்றம் 11ம் வார்டில் இருந்து லாரி மூலம் சுடுகாட்டில் விடப்படும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் மற்றும் தண்ணீரில் குளிக்கும்போது உடல் அரிப்பு ஏற்படுகிறது. எனவே, நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், அண்ணா நகர், மப்பேடுபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட நெடுங்குன்றம் சுடுகாட்டில் கழிவுநீர் திறந்து விடப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டில் சுடுகாடு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் கழிவுநீர் லாரி மூலம் ஊராட்சிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் இருந்து ஏற்றி வரப்படும் கழிவுநீரை திறந்தவெளியில் உள்ள சுடுகாட்டில் ஊற்றுகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அது மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் அடியோடு கெட்டுபோய் வருகிறது.
இதற்கு முன்பு போர்வெல் மூலம் வரும் குடிநீர் சுவையாக இருந்து வந்தது. தற்போது, உப்பு கலந்த நீர் போன்று உள்ளது. மேலும், அந்த தண்ணீரில் குளித்தால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படுகிறது. மேலும், சுடுகாட்டில் கழிவு ஊற்றுபவர்களிடம் பொதுமக்கள் தட்டி கேட்டால் மிரட்டுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.