நெல்லை,ஆக.18: திருக்குறுங்குடி அருகே டிரைவரை தாக்கிய, லாரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அடுத்த தளவாய்புரம் காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் சதிஷ்குமார் (23). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று அங்குள்ள அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுந்தரபாண்டிபுரத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் சுபாஷ் சவுந்தரராஜன் அவரிடம், எனது லாரியில் அதிக லோடு ஏற்றி செல்வதாக அதிகாரிகளிடம் ஏன் தகவல் கொடுத்தாய்? எனக் கேட்டு தகராறு செய்தார். தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த சுபாஷ், சதிஷ்குமாரை தாக்கினார். இதுகுறித்து அவர் திருக்குறுங்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இதுதொடர்பாக சுபாஷை கைது செய்தனர்.