ஈரோடு: ஈரோடு அடுத்த பச்சப்பாளி பிரிவில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக, ஈரோடு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, துண்டு சீட்டில் நம்பர் எழுதி கேரள மாநில லாட்டரி என விற்பனை செய்தவரை கையும் களவுமாக பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், நொச்சிபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் (45) என்பது தெரியவந்தது. அதன்பின், அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த துண்டுச் சீட்டுகள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.