திருவண்ணாமலை, ஜூன் 4: திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு விடிய விடிய கிரிவலம் சென்று வழிப்பட்டனர். அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்கு கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது. இறைவனே அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக, மலைவடிவில் எழுந்தருளி இங்கு அருள்பாலிக்கிறார். அதனால், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீபமலையை வலம் வந்து வழிபடுகின்றனர். அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று காலை 10.57 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 9.38 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதிகாலையே அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக, பக்தர்கள் செல்லும் வழியில் நிழற்பந்தல், தரை விரிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும், குளிர்ந்த மோர் வழங்கப்பட்டது. மேலும், கிரிவலம் செல்ல உகந்த நேரம் காலை 10.57 மணிக்கு தொடங்கியபோதும், அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர். கோடை வெயில் சுட்டெரித்ததால், பகலில் கூட்டம் குறைந்தது. மாலை 4 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. அதன்படி, நேற்று இரவு முதல் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்ததால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதனால், கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்க சன்னதிகளிலும், இடுக்குப் பிள்ளையார் கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்தபடி, கிரிவலம் சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும், ஆந்திரம், ெதலங்கானா, கர்நாடகம், வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் நேற்று மாலை முதல் செயல்பட்டன. நகருக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றும் கோயிலுக்கு வருகை தரும் வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.