பெரம்பலூர், ஜூன் 6: பெரம்பலூர் ஒன்றியத்தித்திலுள்ள கிராமங்களில் பிரதமரின் வேளாண் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் மற்றும் வேளாண் ஆராய்ச்சி கழகம் வழி காட்டுதலின் படி, விவசாய வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் விஞ்ஞானிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் வேளாண் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு இயக்கம், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடைபெற்று வருகிறது. அதில் பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எசனை, ஆலம்பாடி, கீழக்கரை, குரும்பலூர், பாளையம் முதலிய கிராமங்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளான முனைவர் மோகனசுந்தரம், முனைவர் ரவி, முனைவர் கிரிபாபு, முனைவர் பழனிசாமி மற்றும் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொணடு, தங்கள் வாழை ஆராய்ச்சி மையத்தில் உள்ள அதிக அடர் நடவு தொழில் நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளையும் விவசாயிகளுக்கு எடுத்துரைததனர். இதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகளும், விவசாயிகளும் கலந்துரையாடல் செய்தனர். இந்தக் கலந்துரையாடலில் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு விஞ்ஞானிகள் ஆலோசனைகள் வழங்கினர்.
இந்த விழிப்புணர்வு மூலம் ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற சாகுபடித் தொழில் நுட்பங்கள், இயற்கை விவசாய நடை முறைகள், நீர்ப் பாதுகாப்பு நுட்பங்கள், காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் பயிர் வகைகள், மண் பரிசோதனை அடிப்படையிலான பயிர் தேர்வு மற்றும் உரமிடுதல், உரங்களின் சீரான பயன் பாட்டை ஊக்குவித்தல், ஒருங்கிணைந்த பூச்சி மற்றம் நோய் மேலாண்மை, அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை, கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீன உப கரணங்களின் பயன்பாடு. மேலும் மத்திய (பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி, பாரத பிரதமரின் விவசாயிகள் பாசனத் திட்டம்) மற்றும் மாநில அரசின் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இது சம்மந்தமான துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வழங்ப்பட்டது.
முகாமில், ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் வசந்தகுமார், முனைவர் புனிதாவதி, முனைவர் சங்கீதா, தோம்னிக் மனோஜ், கோகிலவாணி மற்றும் கால்நடை மருத்துவர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தினர். நிறைவாக விவசாயிகளிடையே நிகழ்வு பற்றிய கருத்து கணிப்பு கேட்கப்பட்டு பதிவு செய்யப் பட்டது. இந்த பிரசாரத்தில் இதுவரை 6,000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.