ஊட்டி, அக்.18: ஊட்டி ரோஜா பூங்காவில் மினியேச்சர் வகை ரோஜா பூக்கள் மற்றும் அரிய வகைய ரோஜா மலரான பச்சை ரோஜா பூத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகளும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகளும் உள்ளன. வனப்பகுதிகளில் காணப்படும் ரோஜா செடிகள் மற்றும் நாட்டு வகை ரோஜா மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளன.
கோடை சீசன்போது, இந்த ரோஜா செடிகள் அனைத்தும் கவாத்து செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்து குலுங்கும். பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் இந்த மலர்களை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதேபோல், கோடை சீசன் போது ரோஜா கண்காட்சியும் நடத்தப்படுகிறது. அதேசமயம் இரண்டாம் சீசன் போது, மலர் செடிகள் கவாத்து செய்யப்பட மாட்டது. செடிகளில் நீண்டு வளராமல் இருக்க அதன் தண்டுகள் மட்டும் வெட்டி அகற்றப்படும்.
தற்போது இரண்டாம் சீசனுக்காக பூங்கா தயார் செய்யப்பட்ட நிலையில், பூங்காவில் பெரும்பாலான செடிகளில் பூக்கள் காணப்படுகிறது. மேலும், தற்போது ரோஜா பூங்காவில் அரிய வகை ரோஜாவான பச்சை நிற ரோஜா மலர்களும், அதே போல் மினியேச்சர் வகை ரோஜா மலர்களும் அதிகளவு பூத்துள்ளன. இந்த அரிய வகை பச்சை ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த அரிய வகைய பச்சை ரோஜா மலர்களை புகைப்படம் எடுப்பது மட்டுமின்றி, இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.