சேலம், மே 26: சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், இதையடுத்து கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் சேலம் அம்மாபேட்டை, எருமாபாளையம், அழகாபுரம், குகை, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட மாநகர பகுதிகளில் செயல்படும் 60க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதில், 52கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
இதைதொடர்ந்து, அந்தந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து கூட்டுறவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் நடந்த சோதனையில் 52 கடைகளில் சிறு, சிறு குறைபாடு கண்டறியப்பட்டது. அந்த கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் தவறு செய்யும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்,’’ என்றனர்.