காஞ்சிபுரம், ஜூன் 25: காஞ்சிபுரத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் சாலையில் களக்காட்டூர், விச்சந்தாங்கல், காலூர் கிராமங்கள் உள்ளன. இந்த, 3 கிராமங்களிலும் கடந்த 2 மாதங்களாக அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் முறையாக வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் களக்காட்டூர் அருகே காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, பொருட்கள் வாங்கச் சென்றால் நெட்வொர்க் பிரச்னை, கைரேகை பதிவாகவில்லை, கருவிழி பதிவு ஏற்கவில்லை உள்ளிட்ட காரணங்களை கூறி ரேஷன் கடை ஊழியர்கள் பொருள்கள் தர மறுக்கிறார்கள். இதுகுறித்து, தாலுகா அலுவலகத்தில் மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கோஷமிட்டனர். மேலும், கடந்த மாதம் வழங்காத பொருள்களையும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாகறல் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சாலை மறியல் போராட்டத்தில் காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.