சேலம், ஆக.20: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொது மக்கள் தகவல் அளித்தால் 24 மணிநேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களும், மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்களும் கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீசாரும், கூட்டுறவு அதிகாரிகளும், வருவாய் அதிகாரிகளும் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை டிஜிபி வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், போலீசார் ரயில்களிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். தினமும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை மண்டல எஸ்பி பாலாஜி மேற்பார்வையில் பொது விநியோகத்திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொது மக்களிடையே ரேஷன் அரிசி, துவரம் பருப்பு கோதுமை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கடத்தல்,பதுக்கலில் ஈடுபடுவோர்கள் மீது தகவல்கள் தெரிவிக்கும் வகையிலும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணை கொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர், சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் போஸ்டர்கள் பொது மக்கள் பார்வையில் படும்படி பஸ் நிலையம், ரயில் நிலையம், ரேஷன் கடைகள், பஞ்சாயத்து அலுவலகம், சுங்கசாவடிகள் மற்றும் பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக இந்த இலவச தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை சிலர் சட்ட விரோதமாக கடத்திச்சென்று மாட்டுத் தீவனம் மற்றும் இட்லி மாவு தயாரிக்க பயன்படுத்துகின்றனர். சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து புகார் அளிக்கலாம். பொதுமக்களின் புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.