தேனி, நவ. 19: தேனி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் தேனி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள 41 விற்பனையாளர் மற்றும் 08 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் https://drbtheni.net என்ற இணையதளம் வழியாக பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 25.11.2024 முதல் 04.12.2024 வரை வீரபாண்டியில் உள்ள சவுராஷ்டிரா (பி.எட்) கல்வியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
நேர்முகத் தேர்விற்கான அனுமதிச் சீட்டினை 18.11.2024 முதல் தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் https://drbtheni.net வழியாக விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடவுச்சொல் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சந்தேகங்கள் ஏதேனும் ஏற்படின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் தொலைபேசி எண். 04546-291 929 மற்றும் www.drbtheni@gmail.com மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு தகவல் பெற்று கொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.