விருதுநகர், நவ. 29: விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 58 ரேசன் கடை விற்பனையாளர்கள், 13 கட்டுனர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த நவ.7 வரை ஆன்லைனின் பெறப்பட்டன. ஆன்லைனில் 58 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 7,997 விண்ணப்பங்களும், 13 கட்டுனர் பணியிடங்களுக்கு 1,705 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கு ஆன்லைனில் அனுமதி கடிதம் அனுப்பப்பட்டன.
இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல், விருதுநகர் சூலக்கரை மேட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வருகிறது. விற்பனையாளர்களுக்கு நவ.25 முதல் டிச.2 வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கு டிச.3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் நேர்காணல் நடைபெறுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு தினசரி காலை 575 நபர்களும், மாலை 575 நபர்களும் அழைக்கப்பட்டு வருகின்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளில் 46 கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் 69 அதிகாரிகள் நேர்காணல் நடத்துகின்றனர். இதற்கான கண்காணிப்பு பணிகளில் 10 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.