விருதுநகர், ஆக.2: ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் விற்பனையாளர் உட்பட 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன்பாக கடந்த 2014ல் ரேசன் பொருட்களை கடத்தி சென்ற வாகனத்தை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். வேனில் 350 கிலோ ரேசன் அரிசி, 185 கிலோ துவரம்பருப்பு, 250 கிலோ உளுந்தம்பருப்பு கடத்தி செல்வது தெரியவந்தது.
கடத்தி சென்ற பொன்னுச்சாமி(48), சிவந்திபட்டி ரேசன் கடை விற்பனையாளர் நிரைமடை(44), முத்துச்சாமி(60), காளியப்பன்(57) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விருதுநகர் ஜே.எம். நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, பொன்னுச்சாமி, நிரைமடை, முத்துச்சாமி ஆகியோருக்கு ஓராண்டு சிறை, ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். காளிப்பனை விடுதலை செய்து உத்தவிட்டார்.