ராமநாதபுரம்,நவ.8: ராமநாதபுரம் அருகே கேணிக்கரையில் 173 மூட்டை ரேசன் அரிசி கடத்திய இரண்டு பேர் லாரி, காருடன் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் டவுன் சாலையில் ரேசன் அரிசி கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐ.சிவஞான பாண்டியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒரு லாரி வேகமாக சென்றது. மடக்கி பிடித்து லாரியை சோதனையிட்டதில் 173 மூட்டை ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் பின் தொடர்ந்து வந்த ஒரு கார், 8,656 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் தெய்வேந்திரன்(42), லோடுமேன் நேதாஜி மகன் சரவணன்(24) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கார் டிரைவர் முத்துப்பாண்டி, அரிசி வியாபாரி கேணிக்கரை நிஷா ஆகியோரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை அரசு வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.