மதுரை, செப். 11: ஆண்டுதோறும் செப்டம்பர் 9ம் தேதி, உலக முதலுதவி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஆபத்து காலங்களில் அதிகளவிலான ரத்த இழப்பும், முறையான முதலுதவி கிடைக்காததுமே மனித உயிழப்பிற்கு பெரிதும் காரணமாக அமைகிறது. எனவே, ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை முதலுதவி பயிற்சி அவசியம் என்பதனை கருத்தில் கொண்டு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட கிளை சார்பாக மதுரையில் முதலுதவி நாள் விழா அனுசரிக்கப்பட்டது.
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜ்குமார் பள்ளியில் பயிலும் ஜூனியர் ரெட்கிராஸ், தேசிய மாணவர் படை, மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு முதலுதவியின் அவசியத்தையும் அதன் பயன்பாட்டையும் விளக்கினார். பின்னர் அவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.