ரெட்டிச்சாவடி, ஜூன் 3: ரெட்டிச்சாடி அருகே கல்லால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி- கடலூர் எல்லைப் பகுதியான முள்ளோடை நுழைவு வாயில் அருகே தனியார் பேட்டரி கடை முன்பு நேற்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவ்வழியாகச் சென்றவர்கள் கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சம்பவம் நடந்த இடம் தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து கிருமாம்பாக்கம் போலீசார் ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த நபர் சாலையோரம் பழைய பேப்பர், குப்பைகளை பொறுக்கி அவற்றை கடைகளில் விற்று பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2 பேர் பேட்டரி கடை முன்பு படுத்து தூங்குவதும், சிறிது நேரத்தில் அவர்கள் எழுந்து ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், இதில் ஒருவர் கல்லை எடுத்து கொடூரமாக தாக்குவதும், மற்றொருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுவதும், உடனே மற்ற நபர் அங்கிருந்த சாக்குப் பையை எடுத்துக்கொண்டு செல்வதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்து தப்பிச்சென்ற கொலையாளியை தேடி வருகின்றனர். மேலும் குப்பை பொறுக்கும் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் முள்ளோடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.