மயிலாடுதுறை,நவ.5: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஆண்டு விழா மாவட்ட கலெக்டர் மகாபாரதி, தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத்திட்டம் 1.45 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.7.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் 23.9.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கும் குறைவாக உள்ள அனைத்து குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி, இந்த திட்டத்தில் மொத்தம் 1513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 நோய் கண்டறியும் பரிசோதனைகளும் அதனோடு தொடர்புடைய 11 தொடர் சிகிச்சைகளும், 8 உயர் அறுவை சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் வரைமுறைபடுத்தபட்ட சிகிச்சைகள் அனைத்தும் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் அனைத்திலும் அளிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத்திட்டம் ஆகியவை மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனை, சீரகாழி. அரசு மருத்துவமனை, வைத்தீஸ்வரன் கோயில், அரசு மருத்துவமனை, குத்தாலம், அரசு மருத்துவமனை, பொறையார். அரசு மருத்துவமனை, தரங்கம்பாடி ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், ராம் போன் மற்றும் ஜாயின்ட் மருத்துவமனை, மயிலாடுதுறை, விஷ்ணு மருத்துவமனை கொள்ளிடம், மையூரா ஸ்கேன் சென்டர், மயிலாடுதுறை ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் மாவட்ட கலெக்டர், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் பயனடைந்த 6 பயனாளிகளுக்கு நினைவு பரிசுகளையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனை, சீரகாழி, அரசு மருத்துவமனை, வைத்தீஸ்வரன் கோயில், அரசு மருத்துவமனை, குத்தாலம், அரசு மருத்துவமனை, பொறையார், அரசு மருத்துவமனை,
தரங்கம்பாடி, ராம் போன் மற்றும் ஜாயின்ட் மருத்துவமனை, மயிலாடுதுறை ஆகிய மருத்துவமனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்ட தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனை வார்டு மேலாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கை செய்யப்பட்ட 5 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி கலந்து கொண்டனர்.