சேலம், ஆக.27: சேலம் நெத்திமேட்டில் ரூ3 கோடியே 65 லட்சம் மதிப்பில், இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையர் அலுவலகம் கட்டுமான பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் 2002ம் ஆண்டுக்கு முன்பு, கோவையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. அதன்பிறகு கோவையில் இருந்து 4 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு, சேலம் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், சுமார் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்கள், சேலம் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. 4 மாவட்டங்களிலும் நிர்வாகம் செய்ய ஒரு இணை ஆணையர், துணை ஆணையர், அந்தந்த மாவட்ட உதவி ஆணையர், பெரிய கோயில்களில் உதவி ஆணையர், செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் அறநிலையத்துறையில் 9 என்று இருந்த இணை ஆணையர் பதவி 18 ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது 2 மாவட்டங்களுக்கு ஒரு இணை ஆணையர் நியமிக்கப்பட்டார். அந்த வகையில், சேலம் மண்டலத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம் ஈரோட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலையிலும் சேர்க்கப்பட்டது. தற்போது, சேலம் மண்டல இணை ஆணையர் கட்டுப்பாட்டில் சேலம், தர்மபுரி மாவட்டங்கள் உள்ளன. இந்த இணை ஆணையர் மண்டலம் அலுவலகம், கடந்த 1994ம் ஆண்டு பிறகு சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் செயல்பட்டு வந்தது. அங்கு இடம் பற்றாக்குறை ஏற்பட்டதால், அங்கிருந்து சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு கடந்த 2007ம் ஆண்டு மாற்றப்பட்டது.
அப்போது முதல் இந்த அலுவலகம் அங்கேயே செயல்பட்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு, இணை ஆணையர் அலுவலகம் வாடகை செலுத்தி வருகிறது.
இதனிடையே, 15 ஆண்டுக்கு மேலாக, வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இணை ஆணையர் அலுவலகத்திற்கு, சொந்த கட்டிடம் வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தி வந்தனர். இதனை பரிசீலித்த அரசு, இணை ஆணையர் அலுவலகத்துக்கு தனியாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அலுவலகம் கட்டுமான பணியை கடந்தாண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்த கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல உயர் அதிகாரிகள் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டலம் சேலம், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கியது. புதிய ஒருங்கிணைந்த மண்டல அலுவலகம் கட்ட வேண்டும் என்பது பல்லாண்டு கோரிக்கையாகும். சேலம் நெத்திமேடு மாவட்ட எஸ்பி அலுவலத்திற்கு பின்புறம், செவ்வாய்பேட்டை அம்பலவாணசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.80 ஏக்கர் நிலத்தில், 14,340 சதுரடி பரப்பில் நிலம் அளவீடு செய்யப்பட்டது. இந்த நிலத்தில் ₹3 கோடியே 65 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திறப்பு விழா செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.