சத்தியமங்கலம், ஜூன் 26: சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணுவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கோயில் துணை ஆணையர் மேனகா, ஈரோடு உதவி ஆணையர் சுகுமார், ஆய்வர் சங்கர கோமதி, பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், புஷ்பலதா கோதண்டராமன், அமுதா, பூங்கொடி, கண்காணிப்பாளர்கள் சங்கர், யோகலட்சுமி ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு திருக்கோவில் பணியாளர்கள், ராஜன் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் ரூ.65 லட்சத்து 76 ஆயிரத்து 150 ரொக்கமும், 183 கிராம் தங்கமும், 405 கிராம் வெள்ளியும் இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.