வேலூர்: சென்னை தலைமை செயலகத்திலிருந்து ரூ.571.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2.19 கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையம், விழுப்புரம் நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் தெரு நாயக்கன் தோப்பு என்ற இடத்தில் 1.36 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம், வாணியம்பாடி நகராட்சியில் 4.39 கோடி ரூபாய் செலவில் வாரச்சந்தை பகுதியில் மார்கெட், ஒட்டன்சத்திரம் நகராட்சி, காந்தி மார்க்கெட்டில் 21.25 கோடி ரூபாய் செலவில் கடைகள் உள்பட 19 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்:
நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் கீழ் வேலூர் மாவட்டம், சோளிங்கர் நகராட்சி எல்லைக்குட்பட்ட திருத்தணி சாலை இடுகாட்டிற்கு செல்லும் வழியில் 10.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக சாய்வுதள பாலம் அமைக்கும் பணி;
வேலூர் மாவட்டம், சோளிங்கர் நகராட்சி பேருந்து நிலையத்தை 4.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்குதல் பணி என மொத்தம் 15 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகளுகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
பேரூராட்சிகள் சார்பில் திறந்து வைக்கப்பட்ட பணிகளின் விவரங்கள்:
பேரூராட்சிகள் ஆணையரகத்தின் கீழ் வேலூர் மாவட்டம் – பள்ளிக்கொண்டா, கோயம்புத்தூர் மாவட்டம் – மோப்பிரிபாளையம், சிறுமுகை ஆகிய இடங்களில் 6.12 கோடி ரூபாய் செலவில் 3 வாரச்சந்தைகள், வேலூர் மாவட்டம் – பள்ளிக்கொண்டா மற்றும் ஒடுக்கத்தூர் ஆகிய இடங்களில் 56.20 கோடி ரூபாய் செலவில் 2 குடிநீர் மேம்பாட்டு பணிகள், ராணிப்பேட்டை மாவட்டம் – விளாப்பாக்கம் உள்ளிட்ட 14 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.
பேரூராட்சிகள் சார்பில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்:
பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் கீழ் வேலூர் மாவட்டம் – பனப்பாக்கம் பேரூராட்சியில் 6.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP cum FSTP), ஒடுக்கத்தூர் முதல் நேமந்தபுரம் வரை 8.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம், ராணிப்பேட்டை மாவட்டம் – விளாப்பாக்கத்தில் 1.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை, தென்காசி மாவட்டம் – ஆழ்வார்குறிச்சி மற்றும் பண்பொழி ஆகிய இடங்களில் 2.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 பேரூராட்சி அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 18.38 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.