ஈரோடு: 197 கிமீ தூரம் குதிரை சவாரி செய்து, ஈரோடு மாணவ-மாணவிகள் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். இளைய தலைமுறையினரின் உடல் ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கை மேம்பாடு என்ற தலைப்பில் ஈரோடு நிலா அகாடமி சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான குதிரை சவாரி சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோபாலபுரத்தில் உள்ள கேரள மாநில எல்லையில் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. இந்த குதிரை சவாரியை பொள்ளாச்சி தொகுதி எம்பி கே.சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், ஈரோட்டை சேர்ந்த மாணவ-மாணவிகளான நிலா (8), ஆத்விக் (9), வெண்பா (11), பவ்யாஸ்ரீ (13), ஆதித்ய கிருஷ்ணன் (12), மிருத்லா (9), ஷர்வன் (12) ஆகிய 7 பேர் தனித்தனி குதிரைகளில் சவாரியை தொடங்கினார். அவர்கள் ஏற்கனவே குதிரை ஏற்ற பயிற்சியும் பெற்றிருந்ததால், யாருடைய உதவியுமின்றி தாங்களாகவே குதிரையை ஓட்டினர்.