நாகர்கோவில், ஜூலை 6: குமரி மாவட்டம் கேரளம் மாநிலத்துடன் இணைந்து இருந்தபோது, குறிப்பிட்ட சில ஆண்டுகள் வேணாட்டரசர்களின் தலைநகராக இரணியல் விளங்கியது. பத்மநாபபுரம் தலைநகரான பின்னர், இரணியல் இரண்டாம் தலைநகரமாக இருந்தது. அப்போது கட்டப்பட்ட அரண்மனை இரணியல் மார்த்தாண்டேஸ்வரர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோயில் வஞ்சி மார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டதாகும். கி.பி.12-ம் நூற்றாண்டில் இருந்து இப்பகுதியை அரசாண்ட வேணாட்டரசர்களின் முக்கிய அரண்மனையாக இது விளங்கியது. இது பத்மநாபபுரம் அரண்மனைக்கு முன்னரே இரு அடுக்குகளாக கட்டப்பட்ட அரண்மனையாகும்.
இரணியல் அரண்மனை அரசர்கள் ஓய்வெடுக்கும் அறை, அதிகாரிகளும் பிறரும் தங்குமிடம் என்று இரு பகுதிகளை கொண்டது. 2.5 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்தில் இக்கட்டிடங்கள் உள்ளன. பெரிய அரண்மனை கட்டிடம் அருகே அரசக்குடும்பத்தினர் குளிக்க ஒரு சிறு குளமும் உண்டு. இரணியல் அரண்மனை ரூ.4.85 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டிடங்கள் பழுது பார்த்தல், பராமரிப்பு வேலைகள், மேற்கூரைகள் மாற்றி அமைப்பு, மின் பழுது சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.