ஈரோடு,ஆக.26: சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளோட்டில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் ரூ.21 லட்சம் மதிப்பிலான வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதனை வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை,10 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை,12 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்டு 800மதிப்பீட்டில் ஆதரவற்ற விதவைகளுக்கான உதவித் தொகை, 10 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் உத்தரவு வழங்கல் என மொத்தம் 38 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
முன்னதாக சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், வெ.குட்டபாளையம் ஊராட்சியில், தானியங்கி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 18லட்சம் மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தானியங்கி கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் பணியையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மணிஷ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) ரமேஷ், மகளிர் திட்ட இயக்குநர் மைக்கேல், குமாரவலசு ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோ, பெருந்துறை தாசில்தார் பூபதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.