கோத்தகிரி,ஆக.15: கோத்தரி அருகே உள்ள கரிக்கையூர் கிராமத்தில் 69 பயனாளிகளுக்கு ரூ.39.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்,அரக்கோடு ஊராட்சி, கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு 69 பயனாளிகளுக்கு ரூ.39.42 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே அரசு அலுவலர்கள் நேரடியாக சென்று இதுபோன்ற முகாம்கள் நடத்தி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று கொள்வதோடு, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருவதுதான் இம் மனுநீதி நாள் முகாமின் நோக்கமாகும். இம்முகாமில் 69 பயனாளிகளுக்கு ரூ.39.42 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் இன்றைய தினம் முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் கரிக்கையூர் அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிட உயர்நிலைப்பள்ளியினை நேரில் பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து,மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவினை உட்கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சத்தியநாராயணன், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.