தர்மபுரி, ஆக.19: தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.39.35 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் சாந்தி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.தர்மபுரி பிரிவு மாவட்ட விளையாட்டரங்கில், ரூ.39.35 லட்சம் மதிப்பீட்டில் உள் விளையாட்டரங்கம் மேற்கூரை மாற்றுதல், அலுவலக சீரமைப்பு பணிகள், வண்ணம் பூசுதல், உள் விளையாட்டரங்கில் புறாக்கள் நுழையா வண்ணம் கம்பி வலை அமைத்தல், உடற்பயிற்சி அறை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை கலெக்டர் சாந்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மாணவிகள் விளையாட்டு விடுதியை பார்வையிட்டு, மாணவிகளிடம் கலந்துரையாடி மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், பயிற்சி பெற வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். அப்போது, விடுதி மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் கணேசன் மற்றும் பயிற்றுநர்கள் பாப்பாத்தி, சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.