தர்மபுரி: தர்மபுரியில், ரூ.36.62 கோடியில், 6 மாடி கொண்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (7ம்தேதி) திறந்து வைக்கிறார். இதில் 2 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் 1967ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில், கலெக்டர் உள்ளிட்ட முக்கிய அலுவலகம் இயங்கி வருகிறது. தற்போதைய கலெக்டர் அலுவலகம் கட்டி 57 ஆண்டுகள் ஆகிறது. நிர்வாக வசதிக்காகவும், வளர்ச்சிக்கு தகுந்த மாதிரியான இட தேவைகளும் அதிகரித்துள்ளது. தற்போதைய கலெக்டர் அலுவலகம் பின்புறம் கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இதுவும் போதுமானதாக இல்லாததால், சில அரசு துறைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இதனால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இதனால், அரசு அலுவலகங்கள் அரசு கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 34 துறைகள் இயங்கி வருகின்றன. இக்கட்டிடத்தில் இடம் இல்லாமல் தனித்தனியாக ஆங்காங்கே அரசு துறைகள் சிதறி இயங்கி வருகின்றன. இதை தவிர்க்க ஒருகுடைக்குள் அனைத்து அரசு துறைகளும் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு சுற்றுலா ஓய்வு மாளிகை பின்புறத்தில், பழைய ஆர்டிஓ ஆபீஸ் மைதானத்தில் 3 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கட்டுமான பணி தொடங்கியது. ரூ.36.62 கோடி மதிப்பீட்டில் 6 மாடியில் கலெக்டர் அலுவலகம் கட்டுமான பணிகள் முடிந்துள்ளது. இதன் திறப்பு விழா இன்று (7ம்தேதி) காலை நடக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி நேற்று திறப்பு விழா காணும் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை, தர்மபுரி திமுக எம்பி ஆ.மணி நேரில் பார்வையிட்டார். அப்போது, தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர்கள் காவேரி, சண்முகம், கோபால், ஐடி விங் அமைப்பாளர் கவுதம், துணை அமைப்பாளர் உதயசூரியன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.