நாமக்கல், ஆக.19: தமிழக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஓமலூர்- சங்ககிரி- திருச்செங்கோடு- பரமத்தி வரையிலான இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஒரு கட்டமாக நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட திருச்செங்கோடு பகுதியில் திருநகர் காலனி முதல் புள்ளிபாளையம் வரையிலான 3.6 கிலோமீட்டர் இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக ரூ.32.50 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் நேற்று நேரில் பார்வையிட்டு தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலையின் தரத்தை உறுதி செய்தார்.
மேலும் சாலை வடிவமைப்பிற்கு தேவையான அளவுகள் மற்றும் சாலை கட்டுமானத்தின் போது கடைபிடிக்க வேண்டிய தர கட்டுப்பாடு சோதனைகள் பற்றி அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது சேலம் வட்ட நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா, சேலம் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் கதிரேசன், உதவி கோட்ட பொறியாளர் நடராஜன், தரக்கட்டுப்பாடு உதவிகோட்ட பொறியாளர் தமிழரசி மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.